Tuesday, November 17, 2015

தூங்காவனம்

முதலிலேயே சொல்லிவிடுகிறேன் நான் ப்ரென்ச் படம் பார்க்கவில்லை - தமிழில் படம் பட்டாசு.  கடலில் நீந்தி நொங்கெடுக்கிற திமிங்கலத்தைக் கொண்டு வந்து  ஸ்விமிங் பூலில் நீந்தச் சொல்லி ஷோ காட்டியிருக்கிறார்கள்.  கமல் எனும் ஒரு ஆளுமைக்கு இதெல்லாம் ஜுஜூபி.

பிடித்தவை பிடிக்காதவை பிடித்துப் பிடிக்காதவை பிடிக்காமல் பிடித்தவை பிடிக்கவே பிடிக்காதவை
---------------------------------------------------------------
லாலாலா என்று ஆரம்பித்து மெயின் ப்ளாட்டுக்கு வராமல் வண்டியை நேரே நடு கூடத்தில் மோதி கதையை முதல் காட்சியிலேயே ஆரம்பித்திருக்கிறார்கள்.

கமல் காலேஜ் முடித்து நான்கு ஆண்டுகள் தான் ஆகிறது என்று காட்டாமல் நரைத்த தாடியோடு வலம் வருகிறார். அஜீத் வாழ்க. என்னுடைய தனிப்பட்ட ஆசை  - கமலின் இந்த மாதிரி வயதொத்த பாத்திரங்களுக்கு தறகாலத் தமிழுலகில் செம தீனியிருக்கிறது. இதற்கு இயக்குனர்கள் கதை செதுக்கவேண்டும் (ஹிந்தியில் அமிதாப் செய்வது மாதிரி). அப்புறம் பாருங்கள் அட்டகாசத்தை

பாட்டு போட்டு படத்தை தொய்ய விடாமல் கடைசியில் பாட்டைப் போடுகிறார்கள்.

திரிஷாவை பிடித்த மிக அரிய படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். படம் முழுக்க - முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு வருவதாலா என்று தெரியவில்லை.

மச்சம் வைத்தால் தான் வில்லன்கள் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்ற மரபை உடைத்து பக்கதில் குளு குளுவென்று இருக்கும் பெண்ணை குமுக்கென்று கவ்வி லபக்கென்று முத்தம் குடுத்து வில்லன்கள் கண்களில் மண்ணைத் தூவுகிறார் தல. ஆனால் கேமிரா ஆங்கிள் சரியில்லை. வெளிச்சமே இல்லாத இடத்தில்
பழைய சினிமா டெக்னிக்கில் பின்னால் இருந்தும் காட்டும் போது தலை மட்டும் தான் தெரிகிறது கமல் உம்மா குடுக்கிறாரா இல்லை சும்மா குடுக்கிறாரா என்று சரிவரத் தெரியவில்லை. இதில் வேறு ஆயிரத்தெட்டு பேர் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறார்கள். என்னைய்யா அவசரம்? மது ஷாலினியாம்.

இன்சொமேனியா கடை மொதலாளிக்கு பணக் கஷ்டம் என்பதால் கடையில் பாதி லைட் எரியமால் இருட்டில் யுவதிகள் காதுக்கு பின்னாடி யுவன்கள் என்னத்தையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள். மற்றவரகள் பக்கத்திலிருப்பவர்களுக்கு டிஸ்டர்ப் ஆகுமே என்று வாய்க்குள்ளேயே வாய் வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கடை அட்ரஸ நோட் பண்ணு நோட் பண்ணு சென்னை...ஈ.சி.ஆர் மெயின் ரோடு சென்னை. சொக்கா சொக்கா

கமலுக்கும் திரிஷாவுக்கும்  காதல் இல்லை. சண்டை போடுகிறார்கள். அதிலும் காலுக்குள் கால் விட்டுப் பின்னி ஏடாகூடமாய் கிடுக்கிப் பிடியெல்லாம் போட்டு சண்டை நடக்கும் போது "வாட் இஸ் ஹாப்பனிங் ஹியர்" என்று நமக்கு டவுட்டு வரக் கூடாது என்று போகிற போக்கில் திரிஷாவை தல கூட ரெண்டு சாத்து சாத்துகிறார். பார்க்கிற நமக்கே வலிக்கிறது. பாவம் சிஸ்டர் திரிஷா.

பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர் என்று விலன்களில் ஹெவி வெயிட் காட்டியிருக்கிறார்கள்.  அதனாலோ என்னவோ யார் மெயின் வில்லன் என்று சரிவர மனதில் பதியவில்லை. பிரகாஷ் ராஜ் சிரிப்பு வில்லன் போலும். நிறைய இடங்களில் கெக்கப்பிக்குகிறார்.

ஆஷா சரத் இந்தப் படத்திலும் பையன் வீட்டுக்கு வந்தாச்சா என்று போனில் விசனப் பட்டுக் கொண்டிருக்கிறார்.

திருவல்லிக்கேணி மேன்ஷனுக்குள் புகுந்தது மாதிரி எந்தப்பக்கம் கதவைத் திறந்து போனாலும் வந்த இடத்திலேயே சுத்தி சுத்தி வருகிறார்கள். ஆனால் கதை நகருகிற வேகத்தில் அதெல்லாம் ரொம்பத் தெரியவில்லை.

டிக்கட் பைசா வசூல் க்யாரண்டி. கர்ப ஸ்திரீகளும் குழந்தைகளும் ஒரு வேளை நெளியலாம்

Thursday, November 12, 2015

சவரக் கதை

சவரம்ன்னு சொன்னால் அந்தக் கால ப்ளாக் அண்ட் வொயிட் படத்துல அப்ளாக் குடுமி வைத்துக்கொண்டு வருகிற மாதிரி இருக்கிறது என்பதால் அங்கங்கே சுத்தத் தமிழில் ஷேவிங் என்றே சொல்லிக் கொள்ள அலொவ் மீ யுவர் ஆனர். வயது வந்த ஆண்களுக்கெலாம் அவர்களுக்கே அவர்களுக்கான பிரத்தியேகமான நேரத்தில் ஒன்று டெய்லி முகச் சவரம் செய்துகொள்ளும் நேரம். சோம்பேறித்தனாமாய் இருந்தாலும் அன்றைய நாளில் செய்ய வேண்டியதில் ஆரம்பித்து இன்னது தான் என்றில்லாமல் கிர்யேட்டிவிட்டியும் ப்ரொக்ட்டிவிட்டியும் கொப்பளிக்கும் நேரமது . இளம்பிராய பெண்கள் குளிக்கப் போனால் குளம் வெட்டுவது மாதிரி சின்ன வயதில் நானெல்லாம் ஷேவிங் செய்யப் போனால் "இவன் சவரம் செய்யப் போனானா, சம்பந்தம் பேசப் போனானா" என்று வீட்டில் மாமா கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்.

இதில் பெரிய விஷயம் என்னவென்றால் ஹாரிப் பாட்டர் படத்தில் வரும் "The wand chooses you" என்பது மாதிரி இந்த ஷேவிங் ரேசர் அமைவது எல்லாம் பெரிய விஷயம். டீ.வியில் பலூனுக்கு ஷேவிங் செய்வது மாதிரி நோகாமல் விசுக் விசுக் என்று ரெண்டு இழுப்பு இழுத்துவிட்டு துண்டால் துடைத்துவிட்டு பக்கத்திலிருக்கும் ஃபாரின் ஏந்திழையை ஏந்தி இழைக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்பிரசண்டி காலத்தில் நானெல்லாம் ஷேவிங் செய்துவிட்டு வந்தால் மிஷ்கின் படத்து சண்டைக்காட்சியில் நடித்து விட்டு வந்த மாதிரி முகம் ரணகளமாக இருக்கும். மாமி வேறு சமயசந்தர்ப்பம் தெரியாமல் கொல்லைப்பக்கம் விழுந்துட்டியான்னு அக்கறையாய் விசாரிப்பார். இந்த இம்சையே வேண்டாம் என்று நம்மவர் மாதிரி தாடி வைத்துக்கொள்ளலாம் என்றால் நம்ம தாடி கள்ளிக் காட்டு இதிகாசமாய் அங்கங்கே முளைத்திருக்கும்.  இப்படி போச்சுன்னா அப்புறம் நமக்கு எப்படி ஏந்திழைன்னு கவலையோ கவலை, அப்புறம் இது ஷேவிங் ரேசர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று அட்வைஸ் வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் (சைய்...ரிட்டையர் ஆன மாதிரி என்னயா  "அப்போதெல்லாம்") மெட்டல் ரேசர் ஒன்று தான் எங்க ஊரில் பிரபலம். அடியில் திருகினால் அலாவுதீனும் அற்புத விளக்கும் மொட்டை பூதம் மாதிரி "ஹூசூர் என்ன வேண்டும்"என்று மேலே திறக்கும். அதில் ஒரு ப்ளேடை வைத்து திரும்பத் திருக்கி ஒரு ஆங்கிளாக ஷேவ் செய்யவேண்டும். அத்தோடு அந்த மெட்டல் ரேசர் இட்லி வைக்கிற இண்டாலியம் சட்டி மாதிரி கனமாக வேறு இருக்கும். ஷேவிங் செய்தாலே ஆர்ம்ஸ் ஜிம் எஃபெக்ட்டில் டெவெலப் ஆகும். ஆங்கிளாய் என்று சொன்னேன் அல்லவா அது கரெக்ட்டாய் 45 டிகிரியில் இருக்கவேண்டும். 43 டிகிரியிலோ 47 டிகிரியிலோ வைத்தால் அதற்கு பிடிக்காது - மிஷ்கின் எஃபெக்ட் தான்.

அதற்கடுத்த மேட்டர் ஷேவிங் க்ரீம். ஒரு கருப்பு கவுன் போட்ட பெண்ணை இடுப்பை வளைத்து இழுத்துப் பிடித்து "பால்மாலிவ் கா ஜவாப் நஹி" என்று கபில்தேவ் சொல்வாரே அந்த பால்மாலிவ்லாம் எங்க மாமா ஒத்துக் கொள்ளமாட்டார் (ஹூம்.... கருப்பு கவுன் பெண்ணையும் தான்) . காத்ரேஜ்ஜில் ஒரு சின்ன வட்ட டப்பாவில் ஷேவிங் சோப் வரும், அந்தக் கால சினிமாவில் நாவிதர்கள் மரப்பெட்டியில்  அதைப் போன்ற ஒரு வஸ்துவைத் தான் வைத்திருப்பார்கள்,  அது தான் மாமா வாங்குவார். "காத்ரேஜ் என்ன கம்பெனி தெரியுமா, கடப்பாரையப் போட்டாலும் காத்ரேஜ் பீரோவ திறக்கமுடியாது, இந்த பீரோ என் கல்யாணத்துக்கு வாங்கினது இன்னிக்கு வரைக்கும் பெயிண்ட் கூட போகலை" என்று ப்ராண்ட் மார்கெட்டிங் ஆரம்பித்துவிடுவார்.  பால்மாலிவ்வும் காத்ரேஜ் கம்பெனியுதுதான்னு சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம் சித்தப்பா பெரியவரா பெரியப்பா பெரியவரா பெரியங்கிறது எதுல வருது? இதுல காத்ரேஜ்ன்னு பெரிசா போட்டிருக்கு அதுல எப்படி போட்டிருக்கு என்று மாமா ஏற்றுக்கொள்ளவில்லை. மேட்டர் அதுவல்ல பின்னாடி போட்டிருந்த விலையில் என்பது எனக்குத் தெரிந்தாலும் சூப்பர் சிங்கரில் சொல்வார்களே "எல்லாம் ஒகே அந்த டயனமிக்ஸ் வரலை" என்று -  ஒன்னியும் சொல்ல முடியாது.

அதற்கடுத்தது ஷேவிங் ப்ரஷ். இந்த முறை இருகோடுகள் தத்துவத்தை முயற்சி செய்து பார்க்கலாம் என்று முதலில் பார்க்  அவன்யூ ஷேவிங் பிரஷ்ஷில் ஆரம்பித்தேன். பால்மாலிவில் ப்ரஷ் அதை விட சல்லிசாக கிடைக்கும் மாமா விழுந்துவிடுவார் என்று நம்பிக்கை. இந்த முறை நான் காத்ரேஜ் என்ன கம்பெனி தெரியுமா, கடப்பாரையப் போட்டாலும் என்று ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே மாமா தேவர் மகன் சிவாஜி கணக்காய் "எலேய்...வாய மூடிக்கிட்டு பேயாம இருக்கணும் தெரியுமில்ல" என்று ஒரு உப்புமா கம்பெனி ப்ரஷை பரிசளித்துவிட்டார். அதன் தாத்பர்யம் தெரியாமல் வட்ட ஷேவிங் சோப் டப்பாவில் க்ரண்டரில் இட்லிக்கு உளுந்து அரைப்பது போல் ப்ரஷ்ஷை வைத்து க்ர்ர்ன்னு சுத்த, மூன்றாவது நாளுக்குப் பிறகு வடிவேலுக்கு ஷாக் அடிச்ச எஃபெக்ட்டில் பிரஷ் முடியெல்லாம் பப்ரப்பேன்னு  நிற்க ஆரம்பித்துவிட்டது.

அப்புறம் அங்க இங்க ஆட்டையைப் போட்டு கைக்காசையும் சேர்த்துப்  போட்டு நண்பணோடு போய் கட்டை விரலாலேயே ரேசரைத் திறந்து மூடும் ஒரே டிக் செவனோ க்ளாக் ப்ளாஸ்டிக் ரேசரும் பால்மாலிவ் க்ரீமும் வாங்கி கொஞ்ச நாட்களுக்கு மாமா பார்க்கும் போது ஒரு ஷேவிங் செட்டு பார்க்காத போது ஒரு ஷேவிங் செட்டு என்று இரு வீடு ஒரு வாசல் கதை ஓடிக் கொண்டிருந்தது.

நிற்க. இப்போ எதுக்கு இந்த டார்ட்டாய்ஸ் என்றால், போன வாரம் ஷேவிங் செய்யும் போது தான் எனக்கு உரைத்தது, அன்று காலேஜில் வாங்கிய அந்த ப்ளாஸ்டிக் செவனோக்ளாக் "சிங்கிள் டிக்" ரேசர் தான் இன்று வரை.  அவசர அவசரமாய் பாதி ஷேவிங்கில் தங்கமணியைக் கூப்பிட்டு "உனக்கு முன்னாடியே எங்க பந்தம் ஆரம்பித்துவிட்டது...இது அவ்ளோ ஸ்பெஷல்"  என்ற வரலாற்று செய்தியை இதை விட விளக்கமாய் சொன்னேன்.  பொறுமையாய் கேட்டு விட்டு கடைசியில் "நான்  கூட கடிகாரம் புதுசோன்னு பயந்துட்டேன்" என்று ப்ரெண்ட்ஸ் வடிவேலு ரியாக்‌ஷன் கொடுத்துவிட்டு  "இதுவுமா உங்ககிட்ட இத்தன  வருஷமா மாட்டிக்கிட்டிருக்கு" என்று கூலாய் போய்விட்டார். தடுக்கி விழுந்தா சாஃப்ட்வேர் இஞ்சினியர் இந்த சமுதாயத்துக்கு ஹிஸ்டரியில் ஆர்வமே இல்ல...அப்படியே விட்டுவிட முடியுமா...எங்கேயாவது ஆவணப் படுத்த வேண்டுமல்லவா...

Sunday, November 01, 2015

அயர்ச்சி


வாழ்க்கை வழக்கம் போல் அப்படியும் இப்படியுமாய் சுழன்று கொண்டிருக்கிறது.  ஆனால் இந்த ஆன்லைன் சமூக வட்டங்களில் அயர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பேஸ்புக் எப்போதாவது, ட்விட்டர் அதை விட மோசம், ப்ளாக் ஹூம் சொல்லத் தேவையே இல்லை என்றிருந்தாலும் வாட்ஸப்பில் தான் தொல்லை தாங்க முடியவில்லை. ஒன்னாப்பில் ஒன்றாய் ஒன்னுக்குப் போனோர் சங்கம், அஞ்சே முக்கால் ட்ரெயினில் மூனாவது காரேஜில் நின்று கொண்டே போனோர் சங்கம் என்று ஏதாவது ஒரு க்ரூப் ஆரம்பித்து சேர்த்துவிடுகிறார்கள். மொபைல் டேட்டாவை ஆன் செய்தால் பச்சாவ் பச்சாவ் என்று கதறுகிறது ஒரு நாளைக்கு நானூறு கருத்து மெசேஜ்கள், இருநூறு போட்டோ மீம்கள், நூறு காமெடி வீடியோக்கள், எட்டு கில்மா வீடியோ என்று குறைவில்லாமல் குமிகிறது.  டேட்டா வீணாய் போகவேண்டாமே என்று சமூகக் கடமையாய் எட்டை மட்டும் பார்த்துவிட்டு மற்றவற்றை அப்படியே டிலீட் செய்து கொண்டிருக்கிறேன். தாவு தீர்கிறது.

என்னவோ காலையில் ஆபிஸ் கிளம்புவதற்கு முன்னால் நிறைய நேரம் இருப்பது போல், மீசையில் ஒரு நரை முடி வந்திருக்கிறது. தேடித் தேடி கத்தரியால் கத்தரிப்பதற்குள் கால் மணி காலாவதியாகி விடுகிறது. வயசான பையனுக்குத் தான் எவ்வளவு சோதனைகள். இது போக மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது. அமைதியே இல்லாமல் இருந்தது. எதிலும் லயிக்கவில்லை. மனம் ஒருமுகப்படுவது என்பது நடவாத காரியமாய் இருந்தது. ஒரு மணி நேர வேலையை இரண்டு மணி நேரத்திலாவது முடிக்க வேண்டாமா ப்ச்.. ஒரு நாளாயிற்று சில நேரம் இரண்டு நாட்கள். ஆனால் இதற்கெல்லாம் எதிர் மாறாகத் தூக்கம் மட்டும் நன்றாக வந்து கொண்டிருந்தது. வெற்றிவேல் வீரவேல்ன்னு கொட்டக் கொட்ட முழித்து மிட் நைட் மசாலா பாத்ததெல்லாம் போய் எட்டு மணிக்கு டி.வியில் குத்துப் பாட்டு வந்தாலே தூக்கம் சொக்க ஆரம்பித்தது. துடிதுடிப்பாய் இருந்தது போய், தின்னா நடிகைக்கு கல்யாணம் கேன்சலானதே நாலு வாரம் கழித்துத் தான் தெரியவந்தது. அதற்கப்புறம் தான் அவருக்கு கல்யாணம் நிச்சயமானதே தெரியும். இப்படியே போச்சுன்னா கம்பெனியை ஸ்டாக் மார்க்கெட்டில் இருந்து தூக்கி விடுவார்கள் என்பதால் ஒரு பானபத்திர ஒனாண்டியிடம் ஆலோசனை கேட்டேன்.

ஓனாண்டி சாஃப்ட்வேர் பக்(Read Bug) பிக்ஸ் பண்ணுவதிலிருந்து பாவாடை நாடா முடிச்சுப் போடுவது வரை எல்லாத்துக்கும் சர்வ ரோக நிவாரணி. அன்றைக்கு செம ஃபார்மில் இருந்தார். கொஞ்சம் யோசித்து விட்டு "உடல் மனம் வாக்கு...இவற்றை வசப்படுத்து" என்று ஆரம்பித்து ஓனாண்டி ஒன்றரை மணி நேரம் ஓட்டிக் கொண்டிருந்தார். தம்பி இதே மஹாபாரதம் சீரியலை நானும் பார்ப்பேன்னு கிருஷ்ணா நம்ம ஃபிரண்டு தான்ன்னு ஒரு அதட்டு போட்டதும் தான் கொஞ்சம் அடங்கினார். இருந்தாலும் அவர் சொன்னாரே என்று யோகா செய்யலாம் என்று முடிவு செய்து தேட ஆரம்பித்தேன். மஜாஜ் பார்லர் மாதிரி அரை மணிக்கு இவ்வளவு ஒரு மணிநேரத்திற்கு அவ்வளவு என்று ஆளாளுக்கு கல்லா கட்டிக்கொண்டிருந்தார்கள். சில யோகா படங்கள் மாடிப்படியில் எக்கச்சக்கமாய் விழுந்து எசகுபிசகாய் உடம்பு முறுக்கிக் கொண்டது மாதிரி பார்க்கவே பயமாய் இருந்தது  நல்ல வேளையாக ஒரு பிரபல இந்திய யோகா சாமியார் லண்டனில் பல யோகா மையங்களை நடத்திக் கொண்டு யோகமாய் இருக்கிறார் என்றும் அவர் ப்ரீயாய் சில நாட்கள் நடத்துகிறார் என்றும் தெரியவந்தது. அதிலும்  "அடடே இதோ டாக்டரே வந்துட்டாரே" என்று பழைய தமிழ் படம் மாதிரி ஒரு யோகா மையம் என் ஆபிஸ் அருகிலேயே இருக்கவே, ஆன்லைனில் நோண்டிப் பார்த்து மத்தியானம் ஒன்றிலிருந்து இரண்டு வரை எனக்கு யோகா கற்றுக் கொள்வது தான் வாழ்க்கை இலட்சியம் என்று சேர்ந்துவிட்டேன்.

அந்த நன்னாளில் இடத்தைத் தேடிப் போனால் கள்ளக் கடத்தல் சரக்கைப் பதுக்கி வைக்கும் பிலிடிங்க் மாதிடி செங்குத்தாய் ஆறு அடுக்கில் இருந்தது. வாசலில் பஸ்ஸரை அமுக்குவதிலிருந்தே யோகா பயிற்சி ஆரம்பித்துவிட்டது. "ஹீ இஸ் நாட் இன் டுடே" என்று பதில் வர, ஸ்வாமி யோகா ஆள் இல்லை, ஒரு ஸ்பிரிச்சுவல் சயன்ஸ் என்று விளக்க, 'மூதேவி ஆறாவது மாடிக்கு ஏன்டா நாலாவது மாடி பஸ்ஸர அமுத்துற லிஃப்ட் வேலை செய்யலை மாடிப் படி ஏறியே சாவு ' என்று பதிலுக்கு அன்பாய் வழி சொல்லி ஆறாவது மாடிக்கு வந்தால் பத்துக்குப் பதினாலு ரூமில் போடப்பட்டிருந்த இருபது சேரில் ஒரே ஒரு பெண் மட்டும் ஓரமாய் பவ்யமாய் உட்கார்ந்திருந்தார். எங்கேயோ மறைவாக ஊதுபத்தி ஏத்தியிருந்தார்கள். "போன வாரம் பார்த்தப்போ கூட நல்லா சிரிச்சு பேசிட்டிருந்தாரே என்னாச்சி" என்ற சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி அந்தப் பெண் முகத்தில் சலனமே இல்லாமல் இருந்தார். நடு மையமாய் சுவாமிஜியின் புன்சிரிப்போடு ஆசிர்வதிக்கும் படம், சுவற்றில் ஒரு போஸ்டர் மற்றும் வால் கிளாக், ஓரமாய் ஒரு டேபிளில் சி.டி ப்ளேயர் என்று ரூம் பந்தா இல்லாமல் ரொம்ப அடக்கமாய் இருந்தது. வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் வருவார்கள் என்று புரிந்தது.

ஆரம்பிக்கும் நேரம் நெருங்க நெருங்க எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் வருகிற மாதிரி தெரியவில்லை. கரெக்ட்டாய் ஒரு மணிக்கு அந்தப் பெண் எழுந்து வாட்சைப் பார்த்துக் கொண்டே ஆரம்பிக்கலாமா என்று கதவைச் சாத்தினார். சாப்பிட்டு வந்திருக்கிறீர்களா என்று முதல் கேள்வி. ஆமாம் நேரத்துக்கு சாப்பிடாம லேட்டாச்சுன்னா காஸ் ஃபார்ம் ஆகிடும்ன்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார் என்று சமாதானம் சொல்லி, இதற்கு முன்னால் நான் யோகா செய்தது இல்லை அதனால் எந்த விவரமும் தெரியாது என்று முதலிலேயே உண்மையை விளம்பினேன்.
கவலை வேண்டாம் இது மன அமைதிக்கான தியானம் மட்டுமே இங்கே உடல் சம்பந்தப்பட்ட யோகா பயிற்சி கிடையாது அது எங்கள் மெயின் செண்டரில் மட்டுமே (பர்சில் ஐநூறு ப்வுண்டும் உடலில் இரண்டு பவுண்டும் குறையும்). இங்கே கூட்டுப் பிரார்த்தனை மாதிரி வாரம் ஒரு நாள் மனதை ஒருமுகப் படுத்தும் தியானம் மட்டுமே. இது போல் லண்டன் சிட்டியில் பல இடங்களில் வெவ்வேறு நாட்களில் நடக்கும் என்று விளக்கமளித்தார். கையை தவம் செய்வது போல் வைத்துக் கொள்ளச் சொல்லி சுவற்றில் பல வண்ணங்கள் குவிகிற மாதிரி இருந்த ஒரு போஸ்டரை சில நிமிடங்கள் கூர்மையாக பார்த்து விட்டு கண்ணை மூடி தியானம் செய்யச் சொன்னார். சி.டி.யில் தம்புரா லூப்பில் ஓட ஆரம்பித்தது. கண்ணை மூடிக் கொண்டேன். சாப்பாடு போடுவாங்கன்னு ஆன்லைன்ல போடலையே ...என்னத்த வெப்சைட் மெயின்டெயிண் பண்ணுறாங்க போன்ற லௌகீகக் கவலைகளுக்கு அப்புறம் கொஞ்சம் ஒருமுகப் படுவது மாதிரி இருந்தது. இரண்டே பேர் தான் என்பதில் கொஞ்சம் கூச்சம் கலந்த சங்கடம் இருந்தது. மெதுவாய் ஓட்டைக் கண் விட்டு பார்த்தேன் அந்தப் பெண் எதிரே இல்லாமல் என் வரிசையிலேயே அவரும் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தார் என்று புரிந்தது. சைட் ஓட்டைக் கண் ஈஸியாய் கண்டுபிடித்துவிடுவார் என்பதால் அதற்கு மேல் முயற்சி செய்யவில்லை. ஒரு முகமாய் நிலைக்க கஷ்டப்பட்டது. அவர் பாப் கட் பண்ணியிருந்தாரா என்று டவுட்டு வந்தது.  அவருக்கு சம்பளம் உண்டா இல்லை பாவம் ஓசி காஜா என்று அவருக்காக மனம் விசனப்பட்டது. அப்படியே மெதுவாய் மத்தியானம் சாப்பிட்ட பொங்கல் மிளகு வாசத்தோடு ஓங்கரிக்க கொஞ்ச நேரத்தில் தியானம் வசப்பட்டது. யாரோ கண்ணைத் திறக்கலாம் என்று சொல்வது மாதிரி இருந்தது. இரண்டாம் முறை சொன்ன போது அவர் தான் என்று புரிந்தது.  தியானம் சல்ல்லுன்னு போய்ட்டு இருக்கும் போது வண்டிய சடக்குன்னு பிரேக் போட முடியாது பாருங்கோன்னு முகத்தை வைத்துக் கொண்டு மெதுவாய் கண்ணத் திறந்தால் அவர் சிடி ப்ளேயரை ஏறக் கட்டிக் கொண்டிருந்தார்.  கதவு திறந்திருந்தது.

அடுத்து எப்போ க்ளாஸ் என்று கேட்டேன். ஆன்லைன்ல அப்டேப் பண்ணுவோம் என்று முடித்துக் கொண்டார். உங்களுக்கு இந்த பயிற்சி பயன் பட்டிருக்கும் என்று நம்புகிறேன் ஏதாவது சந்தேகங்கள் இருக்கிறதா என்று வினவினார். இல்லை என்று நானும் முடித்துக் கொண்டேன். பதிவை எங்கே ஆரம்பிப்பது என்று மனதில் தெளிவு பிறந்திருந்தது.

Thursday, May 07, 2015

யூகே - எலெக்க்ஷன்

இன்று யூ.கேயில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காமல் சென்ற முறை மாதிரி கூட்டணி ஆட்சி அமைந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதை விடுங்கள் இங்கே நடக்கும் தேர்த்தல் முறைகளில் சில சுவாரசியங்கள் இருக்கின்றன. இங்கே ரெசிடண்டாக இருக்கும் விசா உடைய காமன்வெல்த் நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் இங்கே ஓட்டு போடும் உரிமை கொடுத்திருக்கிறார்கள். அதனால் இந்தியாவில் இருந்து இங்கே ஓராண்டுக்கு மேற்பட்ட வொர்க்பெர்மிட்டில் வந்தாலே இங்கே ஓட்டுப் போடலாம். இதற்கு முக்கியமாக செய்யவேண்டியது வாக்காளர் பட்டியலில் நம் பெயரை இணைத்துக் கொள்வது. அது ஓட்டுப் போடுவதற்கு மட்டுமல்ல, க்ரெடிட் கார்டிலிருந்து எந்த ஒரு க்ரெடிட் அக்ரிமெண்ட்டிற்கும் நம்முடைய க்ரெடி ஹிஸ்டரியை செக் செய்யும் பொழுதும் மிகவும் முக்கியம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பது ஒரு அடிப்படை செக் இங்கே. இல்லாவிட்டால் நம் க்ரெடிட் ஸ்கோர் வெகுவாக குறையும. நிறைய இடங்களில் நம் அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆக சான்ஸ் இருக்கின்றது. வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள கவுண்சிலுக்கு ஒரு ஃபோன் போட்டால், வீட்டிற்கு ஒரு ஃபாரம் போஸ்டில் அனுப்புவார்கள். பெரிய ஃபாரமெல்லாம் இல்லை. நேஷனாலிட்டி, பெயர், பிறந்த தேதி, என்றைக்கிலிருந்து இந்த அட்ரெஸில் இருக்கிறோம் இவ்வளவு தான். தகவல்களைப் பூர்த்தி செய்து திரும்ப அனுப்பினால் போதும் (அவர்கள் நம் தகவல்களை சரி பார்த்து செக் செய்து) நம் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும். அவ்ளோ தான் மேட்டர்.
ஓவ்வொருத்தருக்கும் நம்மூர் மாதிரி வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஓட்டுப் போடும் பூத் அலோகெட் ஆகியிருக்கும். ஆனால் அங்கே போய் ஓட்டுப் போடுவதற்கு, கையை வீசிக் கொண்டு போய் நம்முடைய பெயரும் அட்ரெஸும் சொன்னால் போதும் அடையாள அட்டை கூட கொண்டு போகவேண்டாம். மூனாவது தெரு முனுசாமியா ஆங் இதோ இருக்கேன்னு வோட்டு சீட்டைக் கொடுத்து விடுவார்கள். அதாவது இங்கே டெக்னிக்கலாய் கள்ள ஓட்டு போடுவது ரொம்ப ரொம்ப .ஸி. காலை 7மணியிலிருந்து இரவு 10 மணி வரை தேர்தல் நடக்கும். போஸ்டல் ஓட்டிற்கு பதிவு செய்து போஸ்ட் செய்ய முடியாமல் போய்விட்டால் அதையும் தேர்தல் நாளன்று நம்முடைய பூத்தில் கொண்டு சேர்க்கலாம். ஓட்டு போடுவது இங்கே இன்னமும் பேப்பரில் தான். அதைவிட காமெடி க்ராஸ் போடுவதற்கு வெறும் பென்சில் தான் தருவார்கள். இந்தியா மாதிரி இன்னும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்லாம் இன்னும் அமுலாக்கப் படவில்லை. ஒரு வேளை தப்பா க்ராஸ் போட்டுவிட்டீர்கள் என்றால் சாரி டீச்சர் நான் தப்பா போட்டுவிட்டேன் என்று சொன்னால், ஓகே ஒகே இனிமே இப்படி பண்ணக்கூடாது என்ன என்று கூட சொல்லாமல் இன்னொரு சீட்டு தருவார்கள். ஆனால் முந்தைய சீட்டை வாங்கி வைத்துக் கொள்வார்கள். பூத்தை இரவு 10 மணிக்கு கரெக்ட்டாய் மூடிவிடுவார்கள்., ஒரு வேளை வெளியே க்யூ இருந்தால் அந்த க்யூவை அதற்கு மேல் வளரவிடாமல் மூடிவிட்டு அதுவரைக்கும் சேர்ந்த கூட்டத்தை மட்டும் ஓட்டு பதிவு செய்ய அனுமதிப்பார்கள். பொதுவாக கூட்டம் இருக்காது. இதுவரைக்கும் நான் சென்ற போதெல்லாம் பூத் காத்தாடிக் கொண்டிருக்கும். நல்ல வேளை வந்தீங்க சார் இங்க பாருங்க இவரு சும்மா சும்மா தூங்கி எம்மேல சாய்ஞ்சிகிட்டே இருக்காருங்கிற மாதிரி பேசுவதற்கு ஆள் கிடைத்த சந்தோஷத்தை பூத் ஆபிஸர்ஸ் முகத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த முறை கொஞ்சம் கூட்டம் இருக்கும் என்று நினைக்கிறேன் (கொஞ்சம்ன்னா ஒரு பத்து பதினைஞ்சு பேர் அட் டைம்)
 
இரவு 10 மணியிலிருந்து எண்ண ஆரம்பித்து விடிவதற்குள் முக்கால் வாசி முடிவுகள் வந்துவிடும். கடந்த ஐந்து முறையாக Sunderland தான் இதுவரை 11 மணிக்குள் முடிவுகளை அறிவித்து, முடிவுகளை உடனே அறிவிக்கும் முதலிடத்தை இது வரை பிடித்துக் கொண்டிருக்கிறது. 2005-ல் 45 நிமிடங்களில் அறிவித்து ரெக்கார்ட் செய்தார்கள். இதற்காக ஸ்பெஷலாக ஸ்கூல் மாணவர்கள் லைனாக ஓட்டுப் பெட்டியை பாஸ் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த முறை ஓட்டு போடும் சீட்டை கையாள்வதற்கு வசதியாக 20கிராம் குறைவான கணத்துடன் ப்ரிண்ட் செய்திருக்கிறார்கள். St.Ives எனும் இடம் தான் வழக்கமாக கடைசியாக முடிவுகளை அறிவிக்கும். நாளை மதியம் 1 மணி வாக்கில் தான் அங்கு முடிவுகள் வெளியாகும். அதற்குள் இங்கே யாரு ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது ஓரளவுக்கு தெரிந்திருக்குமாகையால் ராக்காயி இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன கதை தான்.
சிட்டிங் எம்.பி தோற்றால் கோட் சூட் போட்டுக்கொண்டு தோற்றால் கூட மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை சொல்வது என்பது இங்கே சாங்கியம்.
எது எப்படியோ இன்றைக்கு இங்கு சிவராத்திரி :) நானும் முடிவுகளுக்காக ஆர்வமாய் இருக்கிறேன். லவுட் ஸ்பீகர், வேன் மீது நின்று கொண்டு பிரச்சாரம், லவுட் ஸ்பீகர், அவனே இவனே வசவுகள், அன்பளிப்புகள் இவையெல்லாம் இல்லாமல் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு இவர்கள் சுற்றி வரும் போது நம்ம குஜராத்தி, பஞ்சாபிகள் நிறைந்திருக்கும் தொகுதியில் மட்டும் டோல் வாசித்து ஆட்டம் ஆடி எல்லாருக்கும் ஜிலேபி கொடுப்பார்கள். ஆனாலும் சொல்லுங்க ஜிலேபி பிரியாணிக்கு ஈடாகுமா?

Wednesday, May 06, 2015

உத்தம வில்லன்

டிஃபன் ஆச்சா? உங்க வீட்டுல இன்னிக்கு என்னன்னு கேள்வி கேட்டால் ஆச்சு/இல்லை, இன்னிக்கு எங்க வீட்டுல தோசை, இட்லி, பொங்கல் வடைன்னு சொல்லிப் பழகிய நம் சமகால தமிழ் படவுலகில், உள்ளே வரவிட்டு "தம்பி கேட்ட மூடுறா"ன்னு மிரட்டி "வாடா மகனே வா"ன்னு விருந்து வைத்திருக்கிறார். இலையப் போட்டு  ஓரமா தக்காளிச் சட்னியை ஸ்பூனோடு தரையில் "டட்" என்று தட்டிவிட்டு இந்தப் பக்கம்  இட்லிப் பானையிலிருந்து இட்லியைப் பரிமாறுவதற்குள்ளாகவே சட்னியை விரலால் தொட்டு நக்கிப் பழக்கமாகியிருக்கும் கூட்டம்.  கூடத்தில் உட்கார வைத்து "செந்தீ அணங்கிய கொழுநிணக் கொழுங்குறை" என்று லெவல் காட்டியிருக்கிறார்கள். என்ன சொல்றாங்க இன்னிக்கு சாப்பாடு இருக்கா இல்லீயான்னு நிறைய டவுட்டு வருது.

படத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள், புதுமைகள் நிறைய இருக்கின்றன. ஸ்க்ரீன் ப்ளேயிலிருந்து அங்கங்கே புளி போட்டு விளக்காமல் பூடகமாக சொல்லும் விஷயத்திலிருந்து படம் நெடுக Technical excellence. ஆனால் அவற்றை மீறிய ஆயாசமும் இருக்கின்றது. கமலின் முதல் பாட்டிலேயே வயது தெரிகிறது. இவ்வளவு புதுமைகளைப் புகுத்தும் போது இந்த க்ளீஷே இண்ட்ரோ பாரின் லொக்கேஷன் சாங் தேவையே இல்லாதது. பூஜா ஆண்ட்டியை ஏன் கமல் கொணர்ந்தார் என்று எனக்கு சத்தியமாய் புரியவில்லை. பாலசந்தர் பேசுவது அப்படியே நாகேஷ் டப்பிங் பேசுவது மாதிரி உண்ர்ந்தேன். நாகேஷுக்கு இவரிமிருந்து இவ்வளவு பாதிப்பா இல்லை அவரிடமிருந்து இவருக்கு இவ்வளவு பாதிப்பா என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்.

நீ கலக்கிட்டடா, உன்ன விட்டா வேற ஆளே இல்லைடா போன்ற பாலசந்தர் ஜிங்ஜக்குகள் கமலுக்கு தேவையே இல்லாதவை. பாத்திரங்கள் பெயர்களும் ஸ்க்ரிப்டுக்கு தோதாக இருக்கவேண்டும் என்று நினைத்தார்களா தெரியவில்லை.. தீர்க்கதரிசி ....மார்க்கதரிசி தாங்கல. உத்தமன் கதை ஒட்டவே இல்லை ஓட்டமும் இல்லை. வசனங்களில் நிறைய இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகின்றன. நிறைய சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ரகம்.

நாலைஞ்சு பேராய் படம் பார்க்கப் போனால் படம் எப்படி இருக்குன்னு வேறு யாராவது முதலில் சொல்லட்டும் என்று தயங்க வைக்கிற ரகம். பிடிக்கவில்லை என்று சொன்னால் நம் ரசனையை மட்டமாக நினைத்துவிடுவார்களோ என்று யோசிக்க வைக்கும் ரகம். "என்னய்யா படம் இது" என்று கூட்டத்தில் யாரவது எடுத்துக் கொடுத்தால்  ஆமாங்க படமா இது சே ஒரு மண்ணும் புரியலன்னு கூட சேர்ந்து பாட்டுப் பாட வைக்கும் ரகம். இவையனைத்தையும் தாண்டி படத்தில் இயக்குனர் ஆர்வம் உள்ளவர்களுக்கு நிறைய தீனி இருக்கிறது. ஆனால் ஜனரஞ்சகமாய் கொடுக்கத் தவறிவிட்டார்கள் - அது மட்டுமே பெரிய குறை. கொஞ்சம் கேப் விட்டு இன்னுமொருதரம் பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

A classic case study of Operation Success Patient Dead

Friday, April 10, 2015

ஹாட்டன் கார்டன்ஸ் - 2

இந்தப் பதிவு முந்தைய பதிவின் நீட்சியே. அதனால் இதைப் படிப்பதற்கு முன் முந்தைய பதிவைப் படிப்பது தெளிவு பயக்கும். ஹாட்டன் கார்டன்ஸ் கொள்ளை பற்றி மேலும் பல தகவல்களும் தியரிகளும் வந்த வண்ணம் உள்ளன. அவை உண்மையாய் இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சோகம் நீங்கலாக, அது நடத்தப் பட்டிருக்கும் விதத்தில் இருக்கும் புத்திசாலித்தனம், துல்லியம், ப்ரொபஷனலிஸம் எல்லாம் அட என்று வாயைப் பிளக்க வைக்கிறது. எனக்கு ஜார்ஜ் க்ளூனி நடித்து வந்த Oceans Series ஹாலிவுட் படங்கள் பார்த்த போது கூட நிறைய லாஜிக்கல் ஓட்டைகள் தெரிந்திருக்கின்றன. "ஹூம் இண்ட்ரஸ்டிங் ஆனால் இதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும்" என்று நினைத்திருக்கிறேன். ஆனால் ஹாட்டன் கார்டன்ஸ் திருட்டில் வந்து கொண்டிருக்கும் தியரிக்களின் அடிப்படையில் அவற்றையெல்லாம் தாண்டிய புத்திசாலித்தனம் தென்படுகிறது.

முதலில் சில facts and background

யூ.கே வில் மின் தட்டுப்பாடு என்பது மிக மிக மிக மிக அரிது. கடந்த பதினைந்தாண்டு காலத்தில் இது வரை ஒரே ஒரு முறை மட்டும் எங்கள் வீட்டில் பத்து நிமிஷத்திற்கு மின்தட்டுப்பாடு இருந்தது. அதுவும் ஒரு ஆக்சிடெண்டினால் விளைந்த ஒரு பிசகை சரிசெய்ய முந்தைய நாளே "நாளைக்கு பத்து டூ பத்தரை முஹூர்த்தம் குறித்திருக்கிறோம் சிரமத்திற்கு பெரியவர்கள் மன்னிக்க வேண்டும்" என்று நோட்டீஸ் கொடுத்து அரை மணி நேரம் டயம் வாங்கி பத்து நிமிஷத்துக்குள்ளாகவே சரி செய்தார்கள். இங்கே ரொம்ப பெரிய மிஷன் க்ரிட்டிக்கல் டேட்டா செண்டர் மாதிரியான ஆப்பரேஷன்ஸ் தவிர எங்கும் பெரிதாக யூ.பி.எஸ் எல்லாம் இருக்காது. பெரிய பெரிய கம்பெனிகளிலும் செர்வர் மாதிரியான செட்டப்புகளுக்கு மட்டுமே யூ,பி.எஸ் இருக்கும். 2001ல் நான் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஏரியாவில் ஒருநாள் ஒரு தீ விபத்தில் ட்ரான்ஸ்பார்மர் டமாலாகிவிட்டது. ஆபீஸில் சர்வர் தவிர வேறு ஒன்றுக்கும் கரெண்ட் இல்லை. ட்ரான்ஸ்பார்மர் இருந்த திசையை நோக்கி "நல்லா இருங்க சாமியோவ்" என்று கும்பிடு போட்டுவிட்டு எல்லாரும் அப்படியே குஜால்சாக பையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டோம்.




சரி மேட்டருக்கு வருகிறேன். இங்கே ஹாட்டன் கார்டன்ஸ் தெருவிலிருந்து ஒரு அரை கிலோமீட்டர் தொலைவில் கடந்த புதன்கிழமை (01 apr) அன்று ஒரு பாதாள சேம்பரில் தீவிபத்து ஒன்று ஆரம்பித்தது. இங்கே எலக்ட்ரிக் வயர்கள், தொலைபேசி இண்டர்நெட் வயர்கள் மற்றும் எரிவாயு குழாய்கள்  அனைத்தும் ரோட்டுக்கு அடியில் பாதாள வழியாக தான் செல்லும்.(வீட்டிலும் தண்ணீர் பைப் மாதிரி பைப்பில் தான் காஸ் வரும், சிலிண்டர்லாம் கிடையாது) ஹாட்டன் கார்டன்ஸ் இருக்கும் ஹால்பார்ன் ஏரியாவில் அந்த பாதாள சேம்பரில் ஒரு எலக்ட்ரிகல் வயரில் ஃபால்ட் ஏற்பட்டு சின்னதாய் தீ விபத்தானது. அது பாதாளத்திலேயே மெதுவாக ஒரு எரிவாயு குழாயை அடைந்து குழாய் உருகி சின்னத் தீயை நல்ல ஹோமம் வளர்க்கிற மாதிரி நன்றாக திகு திகுவென்று எரிய விட ஆரம்பித்துவிட்டது. இவையனைத்தும் பூமிக்கு அடியில் நல்ல ஆழமான பாதாள சேம்பரில் நடந்து திடீரென்று மேன் ஹோல் வழியாக தீ வெளி வரத் துவங்கியது. தீயினால் காஸ் பைப்பில் லீக் ஆகியதால் இந்த மேன் ஹோல் வழியாக தப்பிக்கும் காஸ் எரிந்து கொண்டிருந்தது. இது தவிர பாதாளத்தில் எரிந்த தீ வேறு அதற்கு மேல் இருந்த ரோட்டிற்கு structrual instability and damageஐ கொடுத்திருந்தது. இது பெரிய இன்சிடெண்டாக ரேட்டிங் உயர்த்தப் பட்டு ஏகப்பட்ட தீயணைக்கும் வண்டிகளும் வீரர்களும் ஈடுபடுத்தப் பட்டனர். இதற்குள் பாதாளத்தில் எலக்ட்ரிகல் வயர்களில் தீ பரவி ஹால் பார்ன் ஏரியாவே மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியது. தீயணைக்கும் வீரர்களால் தீயை உடனே அமர்த்தமுடியவில்லை. அதில் ஒரு முக்கிய சிக்கல் இருந்தது. பாதாளத்தில் காஸ் லீக் ஆகியிருந்ததால் ஆக்சிஜன் தட்டுப்பாடால் அது முழுவது எரியாமல் பாதாளப் பாதையில் அங்கங்கே பில்டப் ஆகியிருந்தது. வீட்டில் காஸ் பர்னரில் எரிவது மாதிரி வெளியேறும் காஸ் ரோடு லெவலில் மட்டும் மேன் ஹோல் கவரில் எரிந்து கொண்டிருந்தது. ரோடு வேறு ஸ்டெபிலிட்டி பிரச்சனை என்பதால் ஏரியாவையே சீல் செய்துவிட்டார்கள். அந்தப் பகுதில் இருந்தவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டார்கள். பூமிக்கடியில் காஸ் பில்டப் ஆகியிருக்கும் என்பதால் மேன் ஹோல் வழியாக அது தப்பித்து எரிந்து தீரும் வரையில் காத்திருப்பது மட்டுமே தீயணைக்கும் படைக்கு ஆப்ஷனாக இருந்தது. அது இல்லாமல் உடனே தீயை அணைத்து விட்டால் பில்டப் ஆகியிருந்த காஸ் வெடித்து சிதறும் அபாயம் இருந்தது. பயங்கர பிஸியான வர்தக ஏரியாவாக இருந்தாலும் அதை ஏற்கனவே மூடிவிட்டதால் காஸ் எரிந்து தீர்வது வரை ஷிப்ட் முறையில் கண்காணித்து காத்திருக்க ஆரம்பித்தனர். புதன்கிழமை ஆரம்பித்த தீ வியாழன் சாயங்காலம் தான் அமர்ந்தது. வெள்ளிக்கிழமையிலிருந்து ஈஸ்டர் விடுமுறை ஆரம்பித்தது. அதற்கப்புறம் அந்த ஏரியாவில் கொஞ்சம் கொஞ்சமாக மின்னினைப்பை சரியாக்க ஆரம்பித்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஹாட்டன் கார்டன்ஸ் லாக்கர் கம்பெனியில்
சமீபத்தில் புதிய அட்வான்ஸ்ட் அலாரம் சிஸ்டம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறார்கள்.ஆனால் அதை இன்னும் நடைமுறைப் படுத்தவில்லை. இந்த மாதிரி காஸ்ட்லியான பொருட்கள் புழங்கும் லாக்கர் கம்பெனிகளில் அலாரம் சிஸ்டம் மிக நுட்பமாக இருக்கும். நிறைய fallbacks இருக்கும். அதாவது எங்காவது ஒரு இடத்தில் சிக்காவிட்டாலும் இன்னொரு இடத்தில் trap இருக்கும். இப்பொழுது புழங்கும் ஒரு தியரி என்னவென்றால் இந்த தீவிபத்தை தடயமே இல்லாமல் ஆரம்பித்ததே இந்த கொள்ளைக் கும்பலாகத் தான் இருக்கும் என்பது. தீ விபத்து ஏரியாவில் பவர் க்ரிட், போலிஸ், தீயணைப்பு என்று அனைத்து டிப்பார்ட்மெண்ட்களின் கவனமும் குவிந்திருந்தது மட்டுமில்லாமல் ஏரியாவையே காலி செய்ய நேர்ந்தது என்பதால் அந்த ஏரியா ரோந்து பணியனைத்தையும் இங்கே டைவர்ட் செய்தார்கள். இதை சம்பந்தப் பட்ட டிப்பார்ட்மெண்ட் அதிகாரிகளும் ஒத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் வெள்ளிக்கிழமை அன்று லாக்கர் கம்பெனியில் அலாரம் அடித்த போது கூட அவ்வளவு கவனம் பெறவில்லை போலும். இது போக ஏரியாவில் பவர் கட் என்பதால் கொள்ளைக் கும்பலுக்கும் லாக்கர் கம்பெனியில் அலாரம் சிஸ்டமை backup பவரிலிருந்து எலிமினேட் செய்வதும் எளிதாக இருந்திருக்கும் என்றும் கணிக்கிறார்கள். இதுபோக அந்த ஏரியாவில் இன்னொரு பாதாள ஹை ஸ்பீட் ரயில் ப்ராஜெக்ட் வேறு நடந்து கொண்டிருந்தது. இந்த ரெண்டு அமளி துமளியையும் உபயோகித்து பூமிக்கடியில் சுவற்றையும், 18 இஞ்ச் இரும்புத் தகடு கதவையெல்லாம் அறுக்கும் போது கவன ஈர்ப்பைத் தவிர்த்திருக்கிறார்கள்.

இந்தக் கொள்ளையில் உள்ள சோகத்தை தவிர்த்துப் பார்த்தோமேயானால், இந்த மாதிரி பெரிய கொள்ளையெல்லாம் லேசுப் பட்ட
காரியம் அல்ல. அதுவும் மிகுந்த நடமாட்டம் உள்ள ஏரியாவில் மிகுந்த செக்யூரிட்டி மிகுந்த ஒரு தெருவில், இவ்வளவு ஹெவி ஆயுதங்களும், எக்கியுப்மெண்ட்ஸூம், முஸ்தீப்பும் தேவைப்படும் கொள்ளையை யாருமே துளி கூட சந்தேகிக்காமல் நோட்டம் விடாமல் எந்த சிக்கலும் இல்லாமல் நடத்த மிகுந்த திறமை வேண்டும். இந்தக் கொள்ளைக் கும்பல் அப்பேற்பட்ட திறமை மிகுந்தவர்களாகவே தெரிகிறார்கள். இவர்கள் செய்த காரிய நோக்கம் மட்டும் தவறாக இல்லாமலிருந்தால் முதுகில் தட்டி கொடுக்கலாம் அவ்வளவு மெட்டிகுலஸ் ப்ளானிங். இது மாதிரி இன்னும் சில பயங்கர புத்திசாலி கொள்ளைகள் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். அவற்றையும் முடிந்தால் தனிப் பதிவாக போட முயற்சி செய்கிறேன்.





Thursday, April 09, 2015

The Bank Job

முதலில் ஒரு சம்பவம் பற்றி சொல்கிறேன் அப்புறம் ஒரு சினிமா.

லண்டனில் என்னுடைய ஆபிஸ் அருகில் ஹாட்டன் கார்டன்ஸ் என்று ஒரு தெரு இருக்கிறது. தெருவென்றால் சாதாரண தெருவல்ல. மிகச் சாதாரணமாய் சில பல மில்லியன் பவுண்டுகள் வர்த்தகமாகும் இடம். பதினாறாம் நூற்றாண்டு முதாலாகவே வைரம், வைடூரியங்கள் வியாபாரமாகும் தெரு. சின்னக் குண்டூசி சைஸ் வைரங்களிலிருந்து உலகின் பெரிய சைஸ் வைரங்கள் வரை பல்வேறு அபூர்வ ரகங்கள், பெரிய சைஸ் ரூபி, எமிரால்ட் என்று அசால்ட்டாய் கைமாறும் இடம்.  வைரங்கள் ஹோல்சேலில் விற்கும் பெரிய பெரிய  வியாபாரிகளும் வியாபித்திருக்கும் இடம். ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் வைர அட்டிகைகள் எல்லாம் மிகச் சாதரணமாக டிஸ்ப்ளேயில் வைத்திருப்பார்கள்.

லண்டனில் சின்னக் கடைகளிலேயே விலையுர்ந்த ஹாண்ட் பேக் மற்றும் நகைகள் வைத்திருக்கும் டிஸ்ப்ளே அலமாரியை பைக்கில் வந்து கோடாலியால் உடைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து சிட்டாய் பறந்துவிடுகிறார்கள் என்பதால் இந்த ஹாட்டன் கார்டன்ஸில் பந்தோபஸ்திற்கு கேட்கவே வேண்டாம். பல்வேறு  லெவெலில்  செக்யூரிட்டிகள் இருக்கின்றன. இது தவிர வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து தனியாக ப்ரைவேட் செக்யூரிட்டியெல்லாம் வேறு வைத்திருக்கிறார்கள். புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டில் ஸ்பெஷல் ப்ரீக்வென்ஸி ரேடியோவில் மிகச் சாதரணமாக அடையாளமே தெரியாமல் வளைய வந்து கொண்டிருப்பார்கள். இந்த பந்தோபஸ்து எல்லாம் சாதாரணமாக நடந்து போகும் நமக்கு சுத்தமாக தெரியவே தெரியாது, ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸீற்கு எந்த குந்தகமும் வராது. ஹாட்டன் கார்டன்ஸில் சவுகரியமாக போய் வரலாம் - ஆனால் நம்முடைய ஒவ்வொரு அசைவயும் நமக்கே தெரியாமல் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அத்தனை கடைகளும், ஹோல்சேல் ட்ரேடர்ஸும் ஒருவருக்கொருவர் பயங்கரமாய் நெட்வெர்க்ட். அங்கிருக்கும் வியாபாரிகளிடம் வர்தக ரீதியாக கொஞ்சம் ராங் டீலிங் செய்தாலோ இல்லை சந்தேகப் படும்படியாக இருந்தாலோ போதும் உடனே போட்டோ அத்தனை கடைகளுக்கும் மற்றும் வியாபாரிகளுக்கும் போய்விடும். அப்புறம் டீலிங் லேசுப்பட்ட டீலிங்காய் இருக்காது.

இந்தத் தெருவில் ஹாட்டன் கார்டன் சேஃப் லாக்கர் கம்பெனி ஒன்று உள்ளது. அண்டர் கிரவுண்டில் பல்வேறு கெடுபிடிகளுக்கும் கம்பிகளுக்கும் டெக்னாலஜிக்கும் நடுவில் சைஸ் வாரியாக லாக்கர்கள் வைத்திருக்கிறார்கள். செக்யூரிட்டிக்குப் பெயர் போன இந்த கம்பெனியில் பெரிய பெரிய சீமான் சீமாட்டிகளும் இந்த தெருவில் வர்தகம் புரியும் ஹோல்சேல் ட்ரேடர்ஸ்களும் லாக்கர்கள் வைத்திருப்பார்கள். ட்ரேடர்ஸ் நாள் இறுதியில் மிச்ச வைரங்களை இங்கே லாக்கரில் பூட்டி வைக்கும் வழக்கமும் உண்டு.

மேட்டர் என்னவென்றால் இங்கே இங்கிலாந்தில் போன வெள்ளியிலிருந்து திங்கள் வரை(06 April) நான்கு நாட்கள் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டரை முன்னிட்டு தொடர்ச்சியாக லீவு. இவ்வளவு செக்யூரிட்டி நிறைந்த இந்த ஹாட்டன் கார்டன் சேஃப் லாக்கர் கம்பெனியை திட்டம் போட்டு கொள்ளையடித்து விட்டார்கள். கேலிக் கூத்து என்னவென்றால் வெள்ளியன்று இத்தனைக்கும் அலாரம் ஒரு முறை அடித்தது என்று சொல்கிறார்கள். சும்மா வெளியிலிருந்து  எட்டிப் பார்த்து உள்ளே ஒன்றும் சந்தேகப் படும் படியாக இல்லையென்று விட்டுவிட்டார்களாம். செவ்வாயன்று திறந்த போது தான் விஷயமே வெளியே  தெரிந்திருக்கிறது. அவ்வளவு நடமாட்டமும் செக்யூரிட்டியும் இருக்கும் இடத்தில் லிப்ட் ஷாஃப்ட் வழியாக சுவற்றைக் குடைந்து பூமிக்கடியில் இருக்கும் சேப்டி லாக்கர் ரூமிற்கு பல்வேறு கம்பிகளையும், இரும்பு ப்ளேட் கதவுகளையும் ஹெவி கட்டரை கொண்டு அறுத்து லாக்கரை எல்லாம் ட்ரில் செய்து ஓப்பன் செய்து கொள்ளையடித்திருப்பது பெரிய அதிர்ச்சி. துல்லியமான ப்ளானிங்குடன் கன கச்சிதமாக ஹாலிவுட் படத்தை மிஞ்சுமளவிற்கு கொள்ளை நடந்தேறியிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிற்கு கொள்ளை போயிருக்கும் என மதிப்பிடுகிறார்கள்.  ஆனால் லாக்கர் வைத்திருப்பவர்கள் தொலைந்ததை முழுவதுமாய் டிக்ளேர் செய்யமாட்டார்கள் என்பதால் அஃபிஷியல் கணக்கு எவ்வளவு வருகிறது என்று இனிமேல் தான் தெரியும். லீவில் நிதானமாய் கொள்ளையடித்து போலீஸ் உஷாராவதற்குள் கொள்ளையர்கள் ஊரை விட்டுப் போய் இந்நேரம் தென் அமெரிக்காவில் போய் செட்டிலாகியிருப்ப்பார்கள் என்றும் மிஸ்டர் இங்கிலீஸ் கழுகு சொல்கிறார். அட தேவுடா


1971ல் லண்டனில் கிட்டத்தட்ட இதே போல் ஒரு வீக்கெண்டில் லாயிட்ஸ் பேங்க் லாக்கர் சேஃப்பில் ஒரு பெரிய கொள்ளை சம்பவம் நடந்தேறியது. அப்போது கொள்ளையர்கள் பேங்கிற்கு இரண்டு கட்டிடங்கள் தள்ளி ஒரு கடையை வாடைக்கு எடுத்து பூமிக்கடியில் பாங்கிற்கு டனல் அமைத்து கொள்ளையடித்தார்கள். இதே போல் பயங்கர ப்ளானிங், துல்லியமான எக்சிக்யூஷன் எல்லாம் இருந்தும் சின்னதாய் ஒரு பெரிய கோட்டை விட்டார்கள். அது பயங்கர சுவாரசியம். அவர்கள் ஓருவருக்கொருவர் கோஆர்டினேட் செய்து கொண்டிருந்த வாக்கி டாக்கி ப்ரீக்வென்சியை ஒரு ரேடியோ ஆர்வலர் எதாச்சையாக கேட்டு போலிஸை உஷார் படுத்த, அவர்கள் எந்த ப்ரான்ச் லாயிட்ஸ் பேங்க் என்று தெரியாமல் (அதை அவர்கள் வாக்கி டாக்கியில் சொல்லவில்லை) இப்போது நடந்தது போல் ஓவ்வொரு கிளையாக போய் சும்மா வெளியிலிருந்து கண்ணாடி வழியாகப் பார்த்து அப்புறம் திங்கள் கிழமை சம்பந்தப்பட்ட கிளையை திறந்த போது தான் தெரியவந்தது. இதுதவிர ஒரு லாக்கரில் பிரிட்டிஷ் இளவரசியின்ஏடாகூடமான படங்களை ஒரு மாஃபியா கும்பல் ப்ளாக் மெயில் செய்வதற்காக வைத்திருநததாகவும் அதுவும் கொள்ளையில் பறி போனதாகவும் ஒரு தியரி நிலவுகிறது. இந்தக் கொள்ளை இன்று வரை கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை மிக மிக சுவாரசியமாய் Jason Statham நடித்து The Bank Job என்று ஒரு ஹாலிவுட் படமாய் எடுத்தார்கள். இதுவரை பார்க்கவில்லை என்றால் பாருங்கள். ஒரு கொள்ளையை பக்கத்திலிருந்து பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். அவ்வளவு க்ரிப்பிங்காய் இருக்கும் படம். அந்த பிரின்சஸ் தியரியை சினிமாட்டிக்காய் அழகாய் முடிச்சுப் போட்டு முடித்திருப்பார்கள்.

Sunday, March 15, 2015

The Imitation Game

சமீபத்தில் ஆபிஸில் ஒரு சந்தர்ப்பத்தில் க்ளீஷே கேள்வி ஒன்று கேட்டிருந்தார்கள். யாராவது மூன்று பேரை தனித் தனித்தனியாக டின்னருக்கு அழைத்துப் போவதாய் இருந்தால் (to spend an evening together) யாரை அழைத்துப் போவீர்கள் என்று. என் பதிலும் க்ளீஷே தனமாய் இருந்தாலும் நான் உண்மையிலேயே சந்திக்க நினைத்த மூன்று பேரில் ஒருவர் ஹிட்லர்.

அவர் செய்த கொடுமையை ஒரு புறம்  வையுங்கள், ஆனால் என்னளவில் சர்வாதிகாரம் என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. அதிலும் பல ஜாம்பவான்களுக்கு மத்தியில் எதிர் கேள்வி கேட்காமல் மலையிலிருந்து குதி என்றால் கூட  சொன்னதை சிரமேற்று செய்யுமளவிற்கு ஒரு ஆளுமையாக இருந்தவர் என்பதாலேயே எனக்கு இவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஈர்ப்பு. இவர் கோலோச்சிக் கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரில் இவரின் தோல்விக்கு சில முக்கிய காரணங்கள் இருந்தன. அப்பேற்பட்ட முக்கிய காரணங்களில் ஒன்று எனிக்மா.

ஓரு பெரிய சைஸ் டைப்ரைட்டரை ஒரு மரப் பெட்டியில் வைத்த மாதிரி இருக்கும் எனிக்மா  - ஜெர்மானியர்களின் பொறியியல் விந்தை.  டைப்ரைட்டர் மாதிரி இருக்கும் இந்த சின்ன மெஷின் அடிக்கும் வார்த்தைகளை சங்கேத வார்த்தகைளாக மாற்றும். ஓரே மெஷின் என்கோடராகவும் டீகோடராகவும் வேலை செய்யும் அவ்வளவே. ஆனால் அப்போது ஹிட்லரை எப்படியாவது மண்டியிடச் செய்ய துடித்துக் கொண்டிருந்த அமெரிக்க, பிரெஞ்சு இங்கிலாந்து கூட்டணி கண்ணில் இந்த எனிக்மா விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தது. ஒரு சின்ன எனிக்மாவில் ஒரு எழுத்தை வேறொரு சங்கேத எழுத்தாக மாற்ற 150 மில்லியன் மில்லியன் மில்லியன் சாத்தியக் கூறுகள் இருந்ததே காரணம்.  ஜெர்மன் படை இந்த எனிக்மாவை வைத்துக் கொண்டு போர் பற்றிய அனைத்து உத்தரவுகளையும் என்கோட் செய்து அனுப்ப,  இங்கே  அச்சு கூட்டணி (Allies) டம்பள்கீ  நிம்பள்கீ டும்பள்கீ  என்று கோட் செய்யப்பட வாக்கியத்தை வைத்துக்கொண்டு என்னய்யா சொல்றான் இந்தாள் ஹிட்லர்  என்று மண்டையைப்  பிய்த்துக் கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்கு அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஒரு எனிக்மா வேறு இருந்தது. ஆனாலும் இந்த 150 மில்லியன் மில்லியன் மில்லியன் சாத்தியக் கூறுகள் காரணமாக கைப்பற்றிய மெஷினை வைத்துக் கொண்டு பிரிட்டிஷாரால் ஒரு லீவு லெட்டர் கூட அடிக்க முடியவில்லை

இது சரி பட்டு வராது என்று மேத்தமெட்டீஷியன்ஸ், ஸ்டஸ்டீஷியன்ஸ், கிரிப்டாலஜிஸ்ட், கோட் ப்ரேக்கேர்ஸ்  என்று வத வதவென்று கொஞ்சபேரை  ப்லீட்ச்லீ பார்க் என்னும் இடத்தில் "கண்ணுங்களா இந்தாங்க இந்த எனிக்மா மெஷின் என்ன செய்வீங்க்களோ  தெரியாது இத பிரிச்சு மேய்ஞ்சு இந்த கோடை உடைத்து சீக்கிரம் டீகோட் பண்ணுங்கப்பா" என்று வேலைக்கமர்த்திவிட்டார்கள். இவர்களும் டம்பள்ககீனா  ஒன்றரை டண் குண்டு என்று ஒரு வழியாய் டீகோட்  செய்தபோது லண்டனில் ஒன்றரை டண்  குண்டு விழுந்து  ஒரு வரமாகியிருந்தது. இந்த  லட்சணத்தில் ஜெர்மானியர்கள் எனிக்மாவின்  செட்டிங்கை வேறு டெய்லி ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து மாற்றிக்கொண்டிருந்தார்கள். செட்டிங் மாறிவிட்டால் என்கோடிங் லாஜிக் மாறிவிடும். இங்கே இவர்கள் கஷ்டப்பட்டு "அ"னாக்கு அனுஷ்கான்னா "ஷ"னாக்கு "ஷகீலா" என்று கண்டுபிடிக்கும் போது அங்கே ஜெர்மனியில் "ஷ"னாக்கு "வடிவுக்கரசி" என்று மாற்றிவிடுவார்கள்.  ஆக அதுவரை செய்த டீகோடிங்கை தூக்கி தேம்ஸில் போட்டுவிட்டு புதிதாய் ஆரம்பிப்பார்கள். அதற்குள் ஜெர்மனி படைகள் ஏகப்பட்ட பேரை துவம்சமாக்கிக் கொண்டிருப்பார்கள்.

இப்பேற்பட்ட இந்த எனிக்மாவை ஆலன் ட்யூரிங் எப்படி உடைத்தார் என்பது தான் இந்த இமிடேஷன் கேம் படத்தின் சாரம்சம். அவர் இந்த எனிக்மாவை உடைக்க செய்த சயன்ஸ் சித்து வேலையே இன்றைய கம்ப்யூட்டருக்கு அடிப்படையாக இருநதது. இந்த மாதிரி படம் பார்த்து முடிக்கும் போது சிந்துபைரவியில் வரும் ஏழை மீனவன் மாதிரி "சாமீய்ய் நல்லா பாடீனீங்க சாமி"ன்னு சங்கு மாலையை கொடுக்கத் தோன்றவேண்டும். தோன்றுகிறது. படம் கிரிப்பிங்காய் இருக்கிறது. எனிக்மா இவ்ளோ பெரிய விஷயமா என்று தோண்டித் துருவத் தோன்றுகிறது. படத்தில் சில பல factuall errors இருப்பதாய் தெரிய வருகிறது. போலிஷ் தான் முதலில் இதை உடைத்தார்கள் ஆனால் அதன் பிறகு ஜெர்மானியர் இதை மாற்றி வடிவமைத்து 150 மில்லியன் மில்லியன் மில்லியன் சாத்தியக் கூறுகளைக் கொண்டு வந்தார்கள் என்று தெரியவருகிறது.  ஆனால் படம் அதையெல்லாம் தாண்டி அட போட வைக்கிறது. Benedict Cumberbatch நடிப்பில் அசத்தியிருக்கிறார். Keira Knightleyயும் செவ்வனே செய்திருக்கிறார். படம் என்ற நினைப்பே வராமல் வரலாற்றில் கலந்து ஆலன் ட்யூரிங்கை பின்தொடர்வது தான் டைரக்டரின் வெற்றி.


நிஜத்தில் ஆலன் ட்யூரிங் எனிக்மாவை உடைக்க ஆள் எடுக்கும் போது பேப்பரில் ஒரு குறுக்கெழுத்துப் போட்டி வைத்திருப்பார். அதே போல் இந்த படத்தின் ட்ரையலரில் ஆலன் ட்யூரிங் "Are you paying Attention" என்று கேட்கும் போது (0:04) ஒரு வெப்சைட் அட்ரஸை ஐ.பி. நம்பராக புதைத்திருப்பார்கள்.(146.148.62.204). அந்த வெப்சைட்டிற்கு போனால் அங்கே அதே மாதிரி ஒரு குறுக்கெழுத்துப் போட்டி வைத்திருந்தார்களாம். கலக்கல்ஸ். ஆனால் அந்த மாதிரி ஒரு போட்டி இன்னும் படத்தின் வெப்சைட்டில் இருக்கிறது. பல் இருப்பவர்கள் பக்கோடா சாப்பிடலாம். --> http://theimitationgamemovie.com/


நிற்க மற்றபடி இது விமர்சனமெல்லாம் அல்ல. ஒரு ரெக்கமெண்டேஷன் அவ்வளவே. அதுவும் ஸ்ட்ராங் ;)




Tuesday, March 10, 2015

வேர்ல்ட் கப்பும் வெங்காய சாம்பாரும்

"நேத்திக்கு மேட்ச் பார்த்தியா..."

திங்கட் கிழமையுமாய் அதுவுமாய் காலையிலேயே பக்கத்திலிருப்பவன் ஆரம்பித்துவிட்டான். சம்பளம் குடுத்து ஆபிஸுக்கு வரச் சொன்னா, கரெக்ட்டா டைமுக்கு வந்தோமா, காப்பியக்  குடிச்சோமா இண்டர்நெட்ட ப்ரவுசர ஓபன் பண்ணினோமான்னு  வேலையில் இறங்காமல் ... பொறுப்பில்லாத ஜென்மங்கள்.

என்ன மேட்ச் என்றே எனக்குத் தெரியவில்லை. ரவிசாஸ்திரி மாதிரி என்னையே ஏண்டா கேக்கிறீங்க...எத்தன நாள் தான் நானும் நடிக்கிறது. ஒரு மேட்சும் பார்க்க மாட்டேன் என்று ஒத்துக்கொள்ள மனம் ஒப்பாது. ஓப்பினாலும் ராயபுரம் ரவுடி மாதிரி கத்தியைக் கீழே வைக்க விடமாட்டார்கள்.

 "ஜலகண்டேஸ்வரா....ஸப்பா என்னா வெய்யிலு என்னா வெய்யிலு. பார்க்கிற நமக்கே இவ்வளவு வியர்க்கிறதே விளையாடுகிற அவர்களுக்கு எவ்வளவு வியர்க்கும்" - நானும் என்னவெல்லாமோ சொல்லிப் பார்ப்பேன்.

"நேத்திக்கு மேட்ச் பார்த்தியா..." - விடமாட்டான் விடாக்கண்டன்

வழக்கமாக "ஆமா என்னா மேட்ச் இல்ல என்னமா விளையாடினாங்க அதுவும் செகண்ட் ஹாப்....அடடா"  என்று நானும் பேச்சு கொடுத்துக் கொண்டே நைஸா ஸ்போர்ட்ஸ் பேஜில் நோட்டம் விடுவேன். க்ளூ கிடைக்கும். மானமுள்ள மனுஷனா இருந்தா க்ரிக்கெட் அல்லது வுமன்ஸ் டென்னிஸ்ன்னு ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் இருக்க வேண்டும். ஆனால் நம்ம பயபுள்ள செகண்டரி ஸ்கூலில் பி.டி. மாஸ்டர் ஆகப் போகிற மாதிரி புட்பால், கால்ஃப்,  ரக்பி, பாஸ்கட் பால், பேஸ்பால்ன்னு ஒன்றையும் விடமாட்டான். அதிலும் உள்ளூர் திருவிழா ஆட்டத்தில் தொடங்கி உசிலம்பட்டி கவுண்டி, லீக், சேம்பியன்ஸ் லீக், ப்ரீமியர் லீக், எப்.ஏ கப்புன்னு எல்லாவற்றையும் பார்த்தாகவேண்டும்.

சன் டிவி, கே.டி.வி, விஜய் டி.வி, ராஜ் டி.வின்னு சிம்பிளான லைப் நம்புளுது. சூப்பர் பவுல் பார்த்தியான்னு ஒரு நாள் கேட்டு, இங்க தானே இருந்தது நேத்து பார்த்தேனே எங்க காணும்,  எடுத்தத எடுத்த இடத்துல வைக்கணும்ன்னு பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்கன்னு நான் தேட அப்புறம் தான் சூப்பு குடிக்கிற பவுல் வேற அமெரிக்கன் சூப்பர் பவுல் வேறன்னு ... ஹும் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு அப்பவாவது அந்தப் பயபுள்ள திருந்தியிருக்க வேண்டாமோ

ரொம்ப டி.வி பார்த்தா கண்ணு அவிஞ்சிரும்ன்னு எங்க மாமா சொல்லியிருக்கார்டான்னா புரியாது. சேம்பியன்ஸ் லீக்க்கும் எப்.ஏ கப்புக்கும் வித்தியாசம் தெரியாது எனக்கு. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் சூப்பர் சிங்கர் பைனல்ஸ், அவுட் ஆப் தெ வேர்ல்ட் பெர்பார்மன்ஸ், எஸ்.எம்.எஸ் வோட்டிங், contestant number

இவன் மட்டுமல்ல, ஆபிஸில் கிச்சன் பக்கம் உட்கார்திருப்பதால், கெட்டிலில் வெந்நீரைப் போட்டு கொதிக்கவிட்டுவிட்டு ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து,  பாகிஸ்தான் என்று நாட்டுக்கு ஒருத்தர் டீக்கடை பெஞ்ச் மாதிரி க்ரிக்கெட் பற்றி அரட்டை அடிக்க வந்துவிடுவார்கள்.  இப்படி பல பேரை சமாளித்து இப்போதெல்லாம் போஸ்டரைப் பார்த்தே படத்தோடு மொத்தக் கதையையும் சொல்ல நிறைய தேர்ச்சி பெற்றுவிட்டேன்.

மேட்ச்சு மேட்ச்சுன்னு யாரு பெத்த புள்ளையோ இப்படி வந்து அசிங்கப் படுதேன்னு இளகிய மனது என்னுது. பழகிய மனது அவனுது. கடன் பட்டார் நெஞ்சம் போல பயபுள்ள கலங்கவிடக்கூடாது என்று நானே பலவழிகளை கடைபிடித்து ஈடுகொடுக்க ஆரம்பித்தேன்.

"சூப்பர் மேட்ச்...என்னா ஸ்கோர் இல்ல"ன்னு சில சமயம் கொக்கியப் போட்டா "ஆமா 47-17லாம் சான்ஸே இல்லை"ன்னு பல்லவி எடுத்துக் கொடுப்பான். ரக்பின்னு கூகிளாண்டவர் அனுபல்லவி எடுத்துக் கொடுத்தால் 1942ல ஒன் ஃபைன் டே இப்படித் தான் ஒரு மேட்சுலன்னு மீதியை நானே சரணம் பாடிவிடுவேன்.

"க்ரவுண்ட்ல மாய்ஸ்சர் நிறைய இருந்தது போல இருந்ததே" என்று கோடு போட்டால், டோட்டன்ஹாம் ஸ்டேடியம் அப்படித் தான்னு அவனே ரோடு போட்டு நடுவில் வெள்ளைக் கோடும் போட்டுவிடுவான்.

கம்பெனியில் நாங்கள் எல்லாரும் நிறைய வேலை பார்த்து லாபம் கொழிக்க வேண்டும் என்று முதலாளி இருபது பேருக்கு ஒரு எல்.ஈ.டி டி.வியை வாங்கி சுவற்றில்  தொங்க விட்டு கேபிள் கனெக்‌ஷன் கொடுத்திருக்கிறார்.  எப்போதாவது ப்ளூம்பர்க்கும், எப்போதும் ஸ்போர்ஸ் சேனலும் ஓடிக்கொண்டிருக்கும்.  பிரகஸ்பதிகள் ரிமோட்டை என் டெஸ்க் பக்கத்தில் வைத்துவிடுவார்கள்.  12 மணிக்கு மேட்ச் இருக்கு மறந்துராதீங்க நம்ம டுபுக்கு தான் கரெக்ட்டா இருப்பார் அதுனால அவர்ட்டயே பொறுப்ப குடுப்போம்ன்னு நம்பிக்கை தீர்மானம் போட்டுவிடுவார்கள். நம்ப ராயபுரம் ரவுடி ராசி அப்படி. பன்னிரெண்டு மணிக்கு மிட் நைட் மசாலாவே நான் கரெக்டா பார்க்க மாட்டேன் சேனலை மாத்தும் போது ப்ரோக்ராம் ஆரம்பித்து பத்து நிமிஷம் தாண்டி நிஜாம் பாக்கு விளம்பரம் ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த டி.விகாரனும் இவ்ளோ படுத்தக் கூடாது. நான் ஒரு தரம் கரெக்டா சேனலைப் போட்டுவிட்டு பாத்ரூம் போய்ட்டு வந்தால் மேட்ச் ஆரம்பித்திருந்தது. நானாவது வாயை மூடிக் கொண்டிருந்திருக்கலாம் - மெனுபாக்சரிங் டிபக்ட். என்னமா ஆடறான் இல்லன்னு சிலாகித்து ஆட்டக்காரன் நெஞ்சுல நூறு ரூபாயை சொருக அப்புறம் தான் அன்றைய மேட்ச் டிலே இது போன வருஷம் நடந்த மேட்ச்ன்னு இவர்கள் விளக்க "போன வருஷ மேட்ச்ன்னா அது நல்ல ஆட்டம் இல்லையா...என்னாங்கடா உங்க ரூல்ஸ்"ன்னு சபையை விட்டு வெளியேறி விட்டேன்.

 ஆபிஸில் தான் இப்படி என்றால் தங்கமணி இதே மாதிரி மாடல் பரீட்சைகள் வெவ்வேறு சப்ஜெக்ட்டில் வைப்பார். இந்த புடவை நியாபகம் இருக்கா என்பதே அதிகம் மார்க் வாங்கும் கேள்வியாய் இருக்கும். "என்னம்மா நீ இது கூட நியாபகம் இருக்காதா, என்னா ஸ்பெஷல் டே அன்னிக்கு கூட நீ பால் பாயாசம் செஞ்சியே...ஓ மை காட் பால் பாயசம்னோடனே தான் நியாபகம் வருது பால் கேன் வாங்கனும்னு சொன்ன இல்ல இரு உடனே நல்ல கேனா பார்த்து வாங்கிட்டு வந்துடறேன் நல்ல ஸ்டாக்லாம் டக்குன்னு தீர்ந்துடும்" லாம் வேகாது. வந்ததுக்கப்புறம் பரோட்டா சூரி மாதிரி கோட்டை அழித்து திரும்பவும் முதல்லேர்ந்து ஆரம்பிப்பார்.

சமீபத்திய குரு பெயர்ச்சியிலிருந்து இப்போதெல்லாம் சிலபஸ் மாறி விட்டது.

அன்றைக்கு "ம்ம்...எப்படியிருந்தது..."ன்னு மொட்டையா அரம்பித்தார்.

"பின்னிட்டான் இன்னிக்கு பின்னாடியிருந்து ஒரு கிக் விட்டான் பாரு நேரா கோல்" - அன்றைக்கு நிஜமாகவே அந்த மேட்ச்சிற்கு பன்னிரெண்டு மணி ஆப்பரேட்டர் உத்தியோகம் பார்த்திருந்தேன்.

"ப்ச்ச் நான் அதக் கேக்கல ... சாப்பாடைக் கேட்டேன்"

குரு பெயர்ச்சி அன்றைக்குத் அமோகமாய் இருந்தது. என்ன சாப்பிட்டேன்னு சுத்தமாக நினைவு இல்லை. மேட்ச்சைப் பார்த்துக் கொண்டே ஏதோ விலுக்கு விலுக்கென்று அள்ளிப் போட்டுக்கொண்டு வந்திருந்தேன். கற்றுக் கொண்ட அனுபவங்களை தக்க சமயத்தில் பயன் படுத்திக்கொள்வீர்கள் என்று தினமலரில் போட்டிருந்தார்கள்.

"அதெல்லாம் நீ செஞ்சா எப்படியிருக்கும். டப்பாவ தொறந்தவுடனேயே வெள்ளக்கார மொட்டை மோப்பம் பிடிச்சுண்டு ஓடி வந்துட்டான். போடா அந்தாண்டன்னு விரட்டிட்டேன். சும்மா சொல்லக் கூடாது சூப்பரா இருந்தது. நம்ம படேல் திரும்பத் திரும்ப ரெசிபி கேட்டான், நான் உன்கிட்ட வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கேன்"  - நரசிம்மா மாதிரி நானும் ஏதாவது சொல்லி கரெண்டுக்கே ஷாக் குடுக்கலாம்ன்னு ட்ரை பண்ணிப் பார்த்தேன்.

தங்கமணி அசரவில்லை நேராக பாயிண்டுக்கு வந்துவிட்டார்.  "சமாளிக்கறதப் பார்த்தா....என்ன சாப்பாடு சொல்லுங்க பார்ப்போம்"

"ஓ நான் சமாளிக்கறேன்னு நினைக்கிறயா.. so..sad.. இரு தாகமா இருக்கு ஒரு நிமிஷம் இங்கியே நில்லு தண்ணியக் குடிச்சுட்டு வந்து விலாவாரியா சொல்றேன்"

ப்ரிஜ்ட்ஜை தொறந்தால் கண்டிப்பாக கொஞ்சம் டப்பாவில் மிச்சம் இருக்கும் க்ளூ கிடைக்கும்ன்னு திறந்து பார்த்தால் சின்ன வெங்காய சாம்பார் டப்பாவில் சமர்த்தாய் உட்கார்ந்து கொண்டிருந்தது. செய்யச் சொல்லி கொஞ்ச நாளாகவே  நச்சரித்துக் கொண்டிருந்தேன். எப்படி இப்படி சாப்பிட்டதே தெரியாமல் எனக்கே என் மீது கொஞ்சம் வெட்கமாய் இருந்தது.

"என்னம்மா இப்படி கேட்டுட்ட... உன்னோட சின்ன வெங்காய சாம்பார் எவ்ளோ சூப்பர், பக்கத்து சீட் மொட்டைக்கு சின்ன வெங்காயத்த எப்படி மூக்கை நறுக்கி வதக்கணும்ங்கிறது வரைக்கும் சொல்லியிருக்கேன்"

தங்கமணி பேசாமலேயே போய்விட்டார். அன்றைக்கு கடையில் சாண்ட்விச் வாங்கி சாப்பிட்டேன் என்பதும் வெங்காய சாம்பார் அடுத்த நாளுக்கு என்பதும் எனக்கு நியாபகத்துக்கு வந்தபோது "சூப்பர் மேட்ச்...என்னா ஸ்கோர் இல்ல"ன்னு மொட்டையுடன் மாட்ச் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன்.

 பை தி வே.....நேத்திக்கு மேட்ச் பார்த்தீங்களா...? என்னா மேட்ச் இல்ல என்னமா விளையாடினாங்க அதுவும் செகண்ட் ஹாப்....அடடா

Tuesday, January 27, 2015

ஜீன்ஸ்

இருள் கவிழ்ந்த இனிமையான மாலை நேரம்.  லண்டன் தேனிசையில் நேயர் விருப்பம் ஓடிக் கொண்டிருந்தது. பாட்டு கேட்பதே அரிதாகி விட்டது.  இனிமையான மாலையில் மேலும் இனிமை சேர்க்கலாமே என்று கூடப் பாடிக் கொண்டிருந்தேன். பொறுக்கவில்லை.

ரெண்டு நாளா வாங்கிட்டு வந்த மாங்காய் ப்ரிஜ்ஜில் இருக்கிறது காய்ஞ்சு போயிடும் இனிமையான மாலையில் இனிமை சேர்த்துக்கிட்டே அப்படியே சின்னச் சின்னதா நறுக்கித் தரலாமே..மிளகாய் மாங்காய் போட்டு முடிச்சிடலாமே என்று உத்தரவாகிவிட்டது.

யாரப் பார்த்து என்னல சொன்ன...நான் மானஸ்தன்டா...எலே சம்முவம்...எடுறா வண்டியன்னு துண்டை உதறித் தோளில் போட்டு ஊர் ஊரா போவதற்கு நாம என்ன  ஒபாமாவா... கத்திய எங்க காணோம்.. இங்க தான் வச்சிருப்ப...அந்த கூறு கெட்ட கத்தி தானா எங்கயோ போய் இசகு பிசகாய் ஒளிந்து கொண்டிருக்கும் என்று கூவும் கவரிங் மான் பரம்பரையாச்சே.

மாங்காயை சின்னச் சின்னதாய் அரிவது பிடித்த விஷயம் தான். பெருங்காயம் கடுகு தாளித்து உப்பு மிளகாய் தூவி...ஆஹா ஆஹா...

நேயர் விருப்பத்தில் ரா ரா சந்திரமுகி பாட்டு ஓட ஆரம்பித்தது. லக லக லக லகா என்று  கூர் தீட்டி அரிய ஆரம்பித்தேன். அசால்ட்டாய் ரெண்டே நிமிஷத்தில் முதல் மாங்காய் டமால், ரெண்டாவது மாங்காய் பணால்.

உடனே எங்கேயிருந்தோ வந்துவிட்டார்கள் மகள்கள்.

டேட் கேன் வி சேஞ்ஜ் தி ரேடியோ டு கிஸ் எப்.எம் ப்ளீஸ்...

அடீங்ங்ங்க...நானே தமிழ்ப் பாட்டு கேக்கலையேன்னு இப்போத் தான் போட்டிருக்கேன்... கிஸ் எப்.எம் மாம்... அப்பான்னு கொஞ்சமாவது மட்டு மரியாதை இருக்கா... பாரதியார் என்ன சொல்லியிருக்கார் தமிழிசையை திக்கெட்டும் பரவச் செய்வீர்ன்னு. எட்டு மணி வரைக்குமாவவது பரவச் செய்வோம் அதுக்கப்புறம் ஷகீரா பரவட்டும் போதும். போய் அம்மா கிட்ட சமத்தா உட்கார்ந்துகோங்க. தமிழும் கத்துக்கோங்க பரம்பரைக்கு பெருமை சேருங்கன்னு  ஒரே போடாய் போட்டு விட்டேன் யாரு கிட்ட.

ஒன்றும் சொல்லாமல் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.

கொஞ்ச நேரத்திலேயே கொடுத்த அட்வைஸை சிரமேரற்றுக் கொண்டு இரண்டாவது மகள் தங்க்ஸிடம் தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள்

அம்மா சரசுக்கு ரா ரான்னா என்னம்மா அர்த்தம்

........

அப்டீன்னா

...ம்ம்ம் அது தெலுங்கு...

திரும்ப சரணம் வந்த போது மூத்தவளுக்கும் அதே டவுட்டு சரசுக்கா...வாட் டஸ் தேட் மீன்

யேய்...லக லக லகாக்கு மீனிங்ங் தெரியுமாடி...அதெல்லாம் விட்டுடு கரெக்ட்டா இதக் கேளுங்க.. அம்மா பிஸியா இருக்கால்ல நோண்டாத அது தெலுங்கு. கொஞ்சம் பொறு கிஸ் எப்.எம் போடறேன்

ஓய்ந்தது என்று நினைத்தேன் இல்லை.

அப்படியே அப்பனோட ஜீன்ஸ் ...கரெக்ட்டா பிடிக்கிறதுங்க.. வார்த்தைய...அதெப்படி கரெக்ட்டா....

ஹலோ நேயர் விருப்பமா... எங்கேயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தா பாட்டு போட முடியுங்களா....